மனைவியை பிரிவதாக அறிவிப்பு.. அதிகாலையில் அதிர்ச்சி அளித்த இயக்குனர் சீனு ராமசாமி..!
- கிராமத்து பின்னணியில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ 3 தேசிய விருதுகளை வென்றது.
- இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.
'கூடல்நகர்', 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'இடம் பொருள் ஏவல்', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே', 'மாமனிதன்' , 'கோழிப்பண்ணை செல்லதுரை' உள்பட பல படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கவிஞரும் ஆவார்.
எதார்த்த வாழ்வியலின் வெளிகளில் கதைகளை பிரதிபலிக்கும் இயக்குனர் சீனுராமசாமியின் முதல் படமான கூடல்நகர் 2007ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன்பின்பு கிராமத்து பின்னணியில் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' 3 தேசிய விருதுகளை வென்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் முதல் முறையாக 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் சீனுராமசாமி.
மேலும் சீனு ராமசாமி எழுத்தில் 'புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை', 'காற்றால் நடந்தேன்', 'மாசி வீதியின் கல் சந்துகள்', 'கோயில் யானையின் சிறுவன்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சீனு ராமசாமி - ஜி.எஸ். தர்ஷனா தம்பதியின்17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
இதுகுறித்து சீனு ராமசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அன்பானவர்களுக்கு வணக்கம்... நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.
இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ் சினிமாவில் இந்த வருடம், ஏ.ஆர்.ரகுமான், ஜெயம் ரவி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் விவகாரத்தை அறிவித்தனர். இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமியும் விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்