null
அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்- ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்டாலின் வாழ்த்து
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
- இவர் பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
கடந்த 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் தன் முதல் படத்திலேயே ரசிகர்களை தன் இசையால் வசியம் செய்துவிட்டார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இன்று வரை மக்கள் கொண்டாடும் விதமாக அமைந்தது.
இப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை புயல் வேகத்தில் உலகெங்கும் பரவியது. மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் தன் இசையால் மக்களை மகிழ்வித்து தன் எல்லையை விரித்தார். பல விருதுகள் வென்ற ஏ.ஆர்.ரகுமான் "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாப்டா விருதுகளை பெற்றார். இதே படம் ஆஸ்கார் விருதையும் வென்றது.
கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரியும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல புதுமைகளை செய்துள்ளார். இவ்வாறு "ரோஜா"-வில் தன் பயணத்தை தொடங்கி இரண்டு ஆஸ்கர்களை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.