மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்
- ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள நிலையில் இதர நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பெயர் அடிபடுகிறது. இவர் ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் தொடர்ச்சியாக அனைத்து காட்சிகளிலும் நடிக்கும் வகையில் யோகிபாபு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்குமுன் தர்பார் படத்தில் ரஜினியுடன் யோகிபாபு நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய 3 படங்களிலும் யோகிபாபு நடித்து இருந்தார். ஜெயிலுக்குள் நடக்கும் மோதலை மையமாக வைத்து ஜெயிலர் படம் தயாராவதாகவும், ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.