'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து - தயாரிப்பு நிறுவனத்தின் கடிதம் லீக்
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.
இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், "நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், 'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், "30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த 'லியோ' இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.