லியோ வெற்றி விழா- இதை மறந்திடாதீங்க
- விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் வெற்றி விழா நாளை நடைபெறுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறவுள்ளது. பேருந்தில் ரசிகர்கள் விளையாட்டரங்கிற்கு வர தடை மற்றும் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்றை காவல்துறை வழங்கியது.
இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தின் வெற்றிவிழா நாளை மாலை 6 மணியிலிருந்து 11 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்காக 4 மணி முதல் ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் பாஸுடன் ரசிகர் மன்ற அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிப்படுவார்கள் என்று ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு வந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ரசிகர்கள் வரும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நிகழ்ச்சியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க படக்குழுவிற்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.