null
ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை- ராகவா லாரன்ஸ்
- நடிகர் ராகவா லாரன்ஸ் 'சந்திரமுகி- 2' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தும் வருகிறார். இவர் சமீபத்தில் என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "சிறிது நாட்களுக்கு முன்பு என் அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன். அதற்கு காரணம் நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போது அறக்கட்டளை ஆரம்பித்தேன் 60 குழந்தைகளை வீட்டில் வளர்ப்பது, மாற்று திறனாளிகளுக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பது என்று செய்து வந்தேன். அப்போது என்னால் அதை பண்ண முடியவில்லை அதனால் மற்றவர்களின் உதவிகளை கேட்டிருந்தேன்.
ஆனால், இப்போது ஹீரோவாகிவிட்டேன் ஒரு வருடத்திற்கு மூன்று படங்கள் நடிக்கிறேன் நல்ல பணம் வருகிறது. எனக்குள்ளே ஒரு கேள்வி இருந்தது உனக்கு நல்லாதானே பணம் வருகிறது ஏன் மற்றவர்களிடம் வாங்கி செய்ய வேண்டும் நீயே செய்யலாமே என்று. ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று கூறவில்லை. எனக்கு கொடுக்கும் பணத்தை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கஷ்டப்படும் அறக்கட்டளைக்கு கொடுங்கள். உங்கள் கையால் இது போன்று செய்யும் போது அதில் கிடைக்கும் சந்தோஷமே தனி" என்று பேசினார்.