இதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை.. நடிகர் ஆர்கே திட்டவட்டம்
- ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை என்று நடிகர் ஆர்கே திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
- கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்தவொரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை என்று கூறினார்.
எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆர்கே. அதனை தொடர்ந்து, அவன் இவன், என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்து கொண்டேதான் இருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்த ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.
ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை. என்னுடைய படம் எப்பொழுதும் தியேட்டர்களில் தான் வெளியாகும். திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான். ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்களின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார்.