இது எனக்கு தல தீபாவளிதான்- உண்மையை உடைத்த எஸ்.ஜே.சூர்யா
- ஜிகர்தண்டா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் 'ஜிகர்தண்டா 2' படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் எஸ்.ஜே. சூர்யா,"ஒரு தரமான படைப்பிற்கு உலகளாவிய வெற்றி கிடைத்துள்ளது. கலெக்ஷன் பார்க்கும் படம் பெயர் எடுக்காது. பெயர் எடுக்கும் படம் கலெக்ஷன் பார்க்காது. ஆனால், இப்படம் இரண்டையும் செய்துள்ளது. மக்கள் படம் பார்க்கும் தரம் வளர்ந்திருக்கிறது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிகப்பெரிய நன்றி. வார நாட்களையும், மழையையும் தாண்டி திரையரங்கு நிறைகிறது என்றால் இது மிகப்பெரிய வெற்றி. இப்படியும் நடிக்க முடியும் என்பதை ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
நான்நடிகனாக வேண்டும் என்று தான் இயக்குனரானேன். நடிகனாகும் போது எல்லோரும் ஏன் இயக்குவதை விட்டு விட்டு நடிக்கிறாய் என்று கூறுவார்கள். அப்போது மன வருத்தமாக இருக்கும். ஆனால், இப்போது அந்த பெயரை மாற்றியது கார்த்திக் சுப்பராஜ் தான்" என்று பேசினார்.
தொடர்ந்து வரும் தீபாவளியை எஸ்.ஜே. சூர்யாவின் தல தீபாவளியை எதிபார்க்கலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எஸ்.ஜே. சூர்யா, "ஜிகர்தண்டா பொண்டாட்டினா இது எனக்கு தல தீபாவளிதான்" என்று கலகலப்பாக பேசினார்.