சினிமா செய்திகள்

விலைமதிப்பற்ற நினைவுகளை எனக்கு பரிசளித்த ரஜினி அப்பாவுக்கு நன்றி- வசந்த் ரவி நெகிழ்ச்சி

Published On 2023-08-29 13:17 IST   |   Update On 2023-08-29 13:17:00 IST
  • நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
  • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படம் நடிகர் வசந்த் ரவிக்கு மிகப்பெரிய மையில் கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் வசந்த் ரவி, 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், 'ஜெயிலர்' எனது சினிமா பயணத்தில் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக மாறியுள்ளது. நான் இத்தனை வருடங்களாக இந்த துறையில் கற்ற முழு அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் உறுதி ஆகியவற்றிற்கு இந்தப் படம் அங்கீகாரம் கொடுத்து, என்னை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது!!


ஆகஸ்ட் 11, 2017 அன்று, இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என 'தரமணி' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆகஸ்ட் 10, 2023 அன்று, ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாரின் மகன் அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைத்தது என இவை அனைத்தும் இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகவே நான் பார்க்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே இடைவிடாத ஊக்கம் மற்றும் ஆதரவை அளித்த 'தலைவர்' ரஜினிகாந்த் (அப்பா) சாருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.


விலைமதிப்பற்ற நினைவுகளை எனக்கு பரிசளித்த ரஜினி அப்பாவுக்கு மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள். படப்பிடிப்பில் அவருடன் கழித்த ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் அழியாத நினைவாக என் நெஞ்சில் இருக்கும். அவர் சொன்ன விஷயங்கள் எனது நடிப்புத் திறனை மட்டுமல்ல, மனிதநேயம், ஆன்மீகம் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் பற்றிய விஷயங்கள் இவை அனைத்தும் எனக்கு வாழ்க்கையைப் பற்றிய புதிய புரிதலையும், புதிய பரிமாணத்தையும் கொடுத்துள்ளது இது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம்.

இத்தகைய மகத்தான வெற்றியை என்னை அனுபவிக்கச் செய்து, ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பிக்கச் செய்த சன் பிக்சர்ஸ் சேர்மன் திரு.கலாநிதி மாறன் சார் மற்றும் ஜெயிலரின் ஒட்டுமொத்த யூனிட்டுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வசந்த் ரவி பதிவு

எனது கடின உழைப்பை மிகவும் பாராட்டிய பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள், யூடியூபர்கள்,மீம் கிரியேட்டர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றி.

எனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்துவேன் என்ற வலுவான நம்பிக்கையுடன் என்னுடன் நின்ற எனது குடும்பத்தினருக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றி. வரவிருக்கும் ஆண்டுகளில் மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து கொடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொண்டு .... விரைவில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க காத்திருக்கிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News