வேலூர் கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெறும் விஷால் படத்தின் படப்பிடிப்பு
- விஷால் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது. படப்பிடிப்பில் நடிகர் விஷால், கதாநாயகி பிரியா பவானி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இதற்காக ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் போல செட் உருவாக்கப்பட்டு இருந்தது.
படப்பிடிப்பு நடக்கும் இடம்
கதாநாயகி பைக்கில் செல்வது போலவும் கைதிகளை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் செல்வது போல காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களை சுற்றிலும் பாதுகாவலர்கள் நிற்க வைக்கப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ஏராளமானோர் குவிந்ததால் கோட்டை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.