null
விஷால் பேச்சைக் கேட்டு தயாரிப்பாளர்கள் ஓடிவிட்டனர்- காதல் சுகுமார்
- திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது.
- படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு.
ஜெகநாதன் தயாரிப்பில் முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் "டப்பாங்குத்து'. முழுக்க முழுக்க நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக சங்கர பாண்டி மற்றும் தீப்தி துர்கா, காதல் சுகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் கதிரேசன், காதல் சுகுமார் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் காதல் சுகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நான் கோமாளி கதாபாத்திரத்தில்நடித்துள்ளேன். படத்தில் 15 நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது கலைஞர்கள் தான். கடைசியாக கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் திரை துறைக்கு தான்.
இதனால் சினிமா துறையை சேர்ந்த பல கலைஞர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கினர். நானே வீட்டில் ரேசன் அரிசியை சமைத்து சாப்பிடும் சூழ்நிலைக்கு வந்தேன். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஜெகநாதன் இந்த படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார். அது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. சிறு பட்ஜெட் படங்கள் தான் என்னை போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. எனவே சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். சமீபத்தில் விஷால் பேசியபோது ரூ. 3 கோடி ரூ.4 கோடி வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள். அப்படி எடுக்கும் படங்கள் வெளியே வருவதில்லை என பேசினார். திமிரு படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. அதனால் திமிராக விஷால் பேசியுள்ளார்.
விஷால் பேச்சைக் கேட்டு படம் எடுப்பதற்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேர் பயந்து போய் எனக்கு தெரிந்து படம் எடுக்காமல் திரும்பி சென்று விட்டனர்.
எனவே படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு.
இவ்வாறு அவர் பேசினார்.