VIDEO: 'சாவா' படம் பார்த்துவிட்டு இரவு முழுவதும் கோட்டைக்கு அருகில் புதையலை தேடிய கிராம மக்கள்
- கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வயல்களில் தோண்டுவதைக் காணலாம்.
- புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் ஒரு காட்சி உள்ளது.
மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'சாவா'.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
முகலாய மன்னர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்ஷய் கண்ணா நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சாவா படத்தில் வரும் காட்சி ஒன்றை பார்த்துவிட்டு மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் புதையலை தேடி கிளம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமவாசிகள் தீப்பந்தங்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வயல்களில் தோண்டுவதைக் காணலாம். பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க நாணயங்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் இலக்கு.
முகலாயர் காலத்தில் புர்ஹான்பூர் ஒரு வளமான நகரமாக இருந்தது. மேலும் இங்கு முகலாய நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்ததாக நம்பப்படுகிறது.
சாவா திரைப்படத்தில் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் (விக்கி கௌஷல்) மற்றும் ஔரங்கசீப் (அக்ஷய் கன்னா) ஆகியோர் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் ஒரு காட்சி உள்ளது. இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, கிராமவாசிகள் அங்கே உண்மையிலேயே ஒரு புதையல் புதைந்து இருக்கலாம் என்று நினைத்து, தோண்டத் தொடங்கியுள்ளனர்.
நேற்று இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வயல்களை கிராம மக்கள் தோண்டியுள்ளனர். சிலர் தங்க நாணயங்களைக் கண்டறிய மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தினர்.
கிராம மக்களின் தோன்றுவதை அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறை ஓடோடி வந்தது. கோட்டை பகுதியில் அரசாங்க அனுமதியின்றி இதுபோன்ற அகழ்வாராய்ச்சி சட்டவிரோதமானது என்று போலீஸ் மக்களை எச்சரித்தது.
உண்மையில் அங்கு புதைக்கப்பட்ட புதையல் ஏதேனும் உள்ளதா இல்லையா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, புர்ஹான்பூரில் தங்கத்தால் நிரம்பிய புதையல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
முகலாயர்களை எதிர்த்து விக்கி கௌஷல் (சத்ரபதி சம்பாஜி) துணிச்சலுடன் போராடும் காட்சிகள், அவுரங்கசீப்பால் சாம்பாஜி சித்திரவதை செய்யப்படும் நெஞ்சை பிழியும் காட்சிகள் என காட்சிக்கு காட்சிக்கு ஸ்கோர் செய்த சாவா படம் இதுவரை ரூ.571 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.