
மறைந்த மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி
- மறைந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- இயக்குனர் பாரதிராஜாவுக்கு விஜய் ஆறுதல் கூறினார்.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சேத்துப்பட்டில் வைக்கப்பட்டு இருந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதையடுத்து, சேத்துப்பட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள மனோஜ் இல்லத்திற்கு அவரது உடலானது கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 3 மணி வரை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் மனோஜ் உடல், பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், உயிரிழந்த மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின், இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்.