கிரிக்கெட் (Cricket)
null

விமர்சனங்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த ஜஸ்பிரித் பும்ரா

Published On 2022-10-06 17:51 IST   |   Update On 2022-10-06 18:50:00 IST
  • விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
  • டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன் என பும்ரா கூறினார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ளது. உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட டாப் 16 அணிகள் களமிறங்குகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார். இந்த வருடம் இந்தியா பங்கேற்ற பெரும்பாலான டி20 தொடர்களில் ஓய்வெடுத்த பும்ரா அதையும் தாண்டி கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் நாட்டுக்காக ஓய்வெடுத்து முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறி விடுவார் என்று ஆதாரங்களுடன் விமர்சித்தனர்.

இருப்பினும் யாராவது நாட்டுக்காக உலகக்கோப்பை போன்ற தொடரில் வேண்டுமென்றே காயமடைந்து வெளியேறுவார்களா? என்று சில ரசிகர்கள் அவருக்கு ஆதரவையும் கொடுத்தனர்.

இந்நிலையில் இதுபோன்ற தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.


அந்த புகைப்படத்தில் "உங்களை பார்த்து குறைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் நீங்கள் கவனம் கொடுத்து நின்று அதன் மீது கல்லை தூக்கி எறிந்து கொண்டிருந்தால் உங்களால் எப்போதும் உங்களுடைய லட்சிய இலக்கைத் தொட முடியாது" என்று இருந்தது.

முன்னதாக காயத்திலிருந்து வெளியேறினாலும் இந்திய அணிக்கு எப்போதும் தம்முடைய ஆதரவு உண்டு என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். டுவிட்டரில் கூறியதாவது:-

இந்த டி20 உலகக்கோப்பையின் ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்பதில் வருத்தமடைகிறேன். ஆனால் எனது காயத்துக்காக எனது அன்புக்குரியவர்களிடமிருந்து நான் பெற்ற வாழ்த்துக்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. இங்கே குணமடைந்து கொண்டிருக்கும் நான் ஆஸ்திரேலியாவில் நம்முடைய அணியை உற்சாகப்படுத்துவேன் என்று கூறினார்.

தற்போது முதுகுப்பகுதியில் எலும்பு முறிவை ஏற்பட்டுள்ளதால் காயத்திலிருந்து குணமடைய 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானாலும் இதுவரை ஜஸ்பிரித் பும்ராவின் முழுமையான காயம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. 

Tags:    

Similar News