விராட் கோலி அபாரம்- வங்காளதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- விராட் கோலி 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
- வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி -சூர்யகுமார் யாதவ் இருவரும் நிதானமான விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்கள், தினேஷ் கார்த்திக் 7 ரன்கள், அக்சர் பட்டேல் 7 ரன்கள் என வெளியேற, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார். ஷாகிப் அல் அசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.