ஆன்மிக களஞ்சியம்

திருக்கடையூர் கோவில் அமைப்பு

Published On 2024-08-20 12:00 GMT   |   Update On 2024-08-20 12:00 GMT
  • திருக்கடையூர் ஆலயம் மொத்தம் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.
  • இந்த ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது.

திருக்கடையூர் ஆலயம் மொத்தம் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.

இந்த ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது.

ஏராளமான சிறப்புகளுடன் அருமையாகத் திகழும் இத்திருக்கோவில் ஏழுநிலை ராசகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

ராசகோபுரத்தில் பாற்கடலைக் கடைந்த காட்சி, ஆனை உரி போர்த்த தேவர், சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர் முதலிய சிற்பங்கள் காணத்தக்கன.

முதல் பிரகாரத்தில் இடதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. அதன் கீழ் நந்தவனம் உள்ளது.

கிழக்கு கோபுரத்திற்கு அருகில் குளம் உள்ளது.

இத்திருச்சுற்றிலேயே தென்மேற்கு மூலையில் இரண்டு நிலை கோபுரமும், ஒரு திருச்சுற்றும் கொண்ட அன்னை அபிராமியின் சன்னதி உள்ளது.

அம்மன் கருவறைக்கு வடபுறத்தில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.

இரண்டாம் பிரகாரத்தில் ஐந்து நிலை கோபுரம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் திருச்சுற்றின் இடதுபுறம் அலங்கார மண்டபமும், ஈசான திசையில் யாகசாலையும் அமைந்துள்ளன.

மூன்றாம் பிரகாரத்தில் ஒருநிலை கோபுரம் உள்ளது.

வாயிலுக்குத் தென்புறம் சிவனுமைமுருகு, போகேசுவரி, முருகன் ஆகிய திருவடிவங்களும், வடபுறம் மார்க்கண்டேசுவரர் லிங்கத்திருவுருவும் உள்ளன.

திருச்சுற்றின் வடபுறத்தில் ஆடல் வல்லான் சன்னதி பைரவர் திருவுருவும், தென்புறத்தில் குங்கிலியக் கலய நாயனார், குங்கிலியம் விற்ற வணிகர், ஏழு கன்னியர், வீர பத்திரர், பிள்ளையார், எமன், அறுபத்துமூன்று நாயன்மார்கள் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.

தல மரமான பிஞ்சிலா மரமும் இங்கு உள்ளது.

கருவறையில் அமிர்தகடேசுவரரின் லிங்கத் திருவுரும் உள்ளது. மரகதலிங்கம் ஒன்று தனியாக, பாதுகாப்பாக பெட்டியில் உள்ளது.

கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கோஷ்ட தெய்வங்களாக வடபுறம் மகிஷன் மீது துர்க்கை, நான்முகன், கீழ்ப்புறம் லிங்கோத்பவர், தென்புறம் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கருவறை விமானம் எட்டுப்பட்டை கொண்டது.

நவக்கிரகங்கள் சன்னதி இல்லை

சிவாலயங்களில் அவசியம் நவக்கிரக சன்னதி இருக்கும். இது தவிர சில ஆலயங்களில் குரு, சனிக்கு தனி தனி சன்னதிகள் கூட அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இக்கோவிலில் நவகோள்கள் இல்லை. எமவேதனையையே தீர்க்கும் அண்ணல் இங்கு இருப்பதால் ஏனைய துன்பங்கள் தீர வழிபட தேவையான நவக்கிரகங்கள் தேவை இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

Tags:    

Similar News