11-2-2025 தைப்பூசம்: அறுபடைவீடுகளின் தனிச்சிறப்புகள்!
- உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது.
- தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது, அவர்களிடம் இருந்து கிடைக்கும் அருள் பன்மடங்காக இருக்கும் என்கிறார்கள்.
'பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த..' என்ற திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகத்தின் வாயிலாக, சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தைப்பூசம் தமிழ்நாட்டில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது.
இந்த உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானது. அதன்பிறகு பிரமாண்டமான நிலப்பகுதி தோன்றியது என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி இந்த உலகம் உருவாகத் தொடங்கிய தினமாக 'தைப்பூசம்' உள்ளது என்பது முன்னோர்களின் கருத்து.
இதனால்தான் இந்த உலகத்தில் முதன் முதலில் நீர் தோன்றியதை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களிலும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது என்று, அந்த கருத்துக்கு வலுசேர்க்கிறார்கள்.
தைப்பூசத் திருநாளில் சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவதும், முருகப்பெருமானை முன்னிலைப்படுத்துவதும்தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
வியாக்ர பாதர், பதஞ்சலி முனிவர் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மன், விஷ்ணு உள்ளிட்ட அனைத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், சிவபெருமான்- அம்பாள் ஆகியோரின் நடனத்தைக் காணும் ஆவல் உண்டானது.
அதன்படி ஈசனும், தேவியும் தங்களின் நடனத்தை அவர்களுக்கு காட்டி அருளிய தினம், இந்த 'தைப்பூச'த் திருநாள் என்கிறார்கள். எனவே இந்த நாளில் சிவாலயங்கள் தோறும், நடராஜருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகிய அசுரர்களிடம் தேவர்கள் சிறைபட்டுக் கிடந்தனர்.
அவர்களை மீட்பதற்காக தேவர்களின் சேனாதிபதியாக இருந்து, அசுரர்களுடன் போர்புரிந்தார், முருகப்பெருமான். போர்க் கடவுளான அவரை போற்றும் விதமாகத்தான் 'தைப்பூசம்' கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள்.
மேலும் வள்ளியை முருகப்பெருமான் மணம் முடித்த தினம் இந்த 'தைப்பூசம்' என்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காததால், முருகப் பெருமான் பழனி மலையில் ஆண்டியாக வந்து நின்ற தினம் 'தைப்பூசம்' என்ற கருத்தும் உள்ளது. இதனால்தான் தைப்பூச திருநாளானது, பழனியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும், இன்னொரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அது என்னவென்றால், முருகப்பெருமான், தமிழர்களின் தெய்வமாக கருதப்படுகிறார்.
தமிழர்களின் உயர்வைச் சொல்லும் மாதமாக தை மாதம் திகழ்கிறது. அதோடு ஒவ்வொரு பவுர்ணமியும் தெய்வத்தை வழிபட சிறந்த நாளாக சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழர் மாதமான தை மாதத்தில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை, பவுர்ணமி தினத்தில் வழிபடுவதால் தைப்பூசம் சிறப்புக்குரிய நாளாக மாறி இருக்கலாம் என்பது பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்தாக இருக்கிறது.
இந்த நாளில் முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
திருப்பரங்குன்றம்
சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலம் ஆகும்.
திருச்செந்தூர்
அசுரன் சூரபத்மனோடு முருகர் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலம் ஆகும்.
பழனி
மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலம் ஆகும்.
சுவாமிமலை
தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தந்த திருத்தலம் ஆகும்.
திருத்தணி
சூரனின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலம்.
பழமுதிர்சோலை
அவ்வைக்கு பழம் உதிர்த்து வள்ளி, தெய்வானையோடு காட்சி தந்த திருத்தலம்.
தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் முருகப்பெருமானுக்கான இந்த தைப்பூசம் சிறப்பான முறையில் நடைபெறுவதை நாம் பார்க்கலாம்.