ஆன்மிகம்
சென்னை தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்ட காட்சி.

தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-06-29 13:11 IST   |   Update On 2021-06-29 13:11:00 IST
கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் தரிசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று இந்த மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் வழிபாடு நடைபெற்றது. நேற்று காலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ததால், கோவில்களில் அதிகம் கூட்டம் இல்லை.

கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் தரிசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்குள்ளாக பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் 7.30 மணி முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News