ஆண்டுக்கு ஒரு நாள் பகலில் மட்டும் திறக்கப்படும் `சிவன் கோவில்'
- திங்கட்கிழமை இரவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
- இத்தல இறைவன் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிவன் கோவிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, உச்சிகால பூஜைகள் நிறைவடைந்ததும் நடை சாற்றப்படும். பின்னர், மாலை நடை திறக்கப்பட்டு சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் முடிவடைந்ததும் நடை அடைக்கப்படும். இது தான் ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் ஆன நடைமுறை.
ஒவ்வொரு கோவில்களிலும் கால பூஜைகள் மாறுபடலாம், ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றி தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு கோவில் மட்டும் திங்கட்கிழமை இரவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
இதன் மற்றொரு விஷேசம், வருடத்தில் ஒரு நாள் மட்டும் பகலில் கோவில் திறந்திருப்பது. அந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள், விஷேச பூஜைகள் குறித்து இங்கு காண்போம்.
இத்தகைய சிறப்புமிக்க கோவில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.
எல்லா சிவன் கோவில்களிலும் கருவறையில் சிவலிங்க திருமேனி தான் மூலவராக இருப்பதை நாம் தரிசிப்போம். ஆனால், இங்கு கருவறை உண்டு, ஆனால் சிவலிங்க திருமேனி இல்லை. வெள்ளால மரமாகவே சிவபெருமான் காட்சி தருகிறார்.
கோவில் கருவறை கதவு பித்தளை தகடால் வேயப்பட்டது. கதவு திறக்கப்பட்டதும் கருவறையில் உள்ள வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். இங்கு அம்பாளுக்கு சன்னதி கிடையாது.
கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கட்கிழமை) முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடத்தப்படும், அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் பூஜைகள் வெகு விமரிசையாக நடப்பதுண்டு.
தமிழர் திருநாளான தைத் திருநாளன்று மட்டும் பகலில் கோவில் நடை திறக்கப்படுவதால் அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். பின்னர், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதை காண்பிக்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு நாள் பகலில் நடை திறக்கப்படுவதால் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் திரள்வர். இவரை மனதார வேண்டிக்கொண்டு எந்த வியாபாரம் தொடங்கினாலும் லாபகரமாக இருக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அவ்வாறு மூலவரை வேண்டிக்கொண்டு வியாபாரத்தை தொடங்கியவர்கள் நெல், கம்பு, தேங்காய், மாங்காய், ஆடு, கோழி, மாடு ஆகியவை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் வழங்கிய பொருட்களை எல்லாம் பொங்கல் அன்று ஏலத்துக்கு விடுவார்கள்.
இதனை ஏலம் எடுத்து சென்றால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம், செல்வ செழிப்புடன் வாழலாம், சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் ஐதீகம். திங்கட்கிழமை இரவு மட்டுமே நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறை கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
பொங்கல் திருநாளன்று பகலிலும், ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவிலும் திறக்கப்படும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாரை நாம் அனைவரும் தரிசித்து, சகல ஐஸ்வரியங்களும் பெறுவோமாக.