திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்- வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்
- கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் திருவூடல் விழா முக்கியமானது.
ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் இந்த விழா நடக்கும். அதன்படி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு அருளாசி வழங்கினார். பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்தார்.
இதையடுத்து, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வரும் வைபவம் நடந்தது.
பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. அப்போது சுந்தரர் தூது சென்றார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு திரும்பினார்.
அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.
ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோன்று வருடம் தொடக்கத்தில் இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்தார். கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். பகல் 11 மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார்.
தொடர்ந்து, சாமியுடன் அம்பாள் சமாதானம் அடையும் மறுவூடல் உற்சவம் கோவில் 2-ம் பிரகாரத்தில் நடக்கிறது.