கோடிக்கணக்கில் ஹவாலா பணம் வழிப்பறியில் கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புழல் சிறையில் அடைப்பு
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
- சன்னி லாய்டு ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கி 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.
சென்னை:
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்தி முனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமானவரித்துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட் டை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது. அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பறி செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், சன்னி லாய்டு மற்றும் கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டு சேர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து அதை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறி அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சன்னி லாய்டை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சன்னி லாய்டு ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கி 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்.
கோடிக்கணக்கில் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு அந்த பணத்தை கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட் வாங்கி இருப்பதாகவும் ஜாம்பஜாரில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகின.
மேலும் அவர் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார், எத்தனை கோடி வழிப்பறி செய்துள்ளார் என்பது போன்ற விவரங்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதனால் அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் விடுமுறை முடிந்ததும் அடுத்த வாரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவரை விசாரணைக்கு எடுத்து மேலும் பல தகவல்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.