பரந்தூர் கிராம மக்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தினர்
- பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
- குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
இதையடுத்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
900 நாட்களை கடந்து நடந்து வரும் போராட்டத்தில் பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வருகிற 19, அல்லது 20-ந் தேதி பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த போலீசார் கிராம மக்களை சந்திப்பதற்கு விஜய்க்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. பெரும்பாலும் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேற்று போராட்டக் குழுவினரை சந்தித்தனர். குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர். தகவல்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் ஒப்படைக்க இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து விஜயின் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.