இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்
- அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் விழா, இன்று காலையிலேயே களை கட்டியது. இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பொருத்தவரை பொதுமக்கள் அதிகம் பேர் கூடுவது மெரினா கடற்கரை ஆகும். காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இன்று மதியத்துக்கு மேல் லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டனர்.
இதனால் மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் மெரினாவில் குவிந்த மக்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள்.
மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் தெரிந்த 200 பேர் தயாராக உள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மெரினா கடற்கரைக்கு செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தனர்.
காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் வருகை அதிகரித்தது. இன்று மதியம் ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து குவிந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பெற்றோரின் தொடர்பு விவரங்களுடன் கை வளையம் வழங்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் அதிகம் உள்ளது. இந்த சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்து சிறுவர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இங்கும் ஏராளமான சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
காணும் பொங்கலை கொண்டாட இன்று காலை முதலே, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வரத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், புலிக்குகை, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளித்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்கு வரும் கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்களும், மாமல்லபுரம் கடலில் குளித்து செல்ல வந்தனர்.
அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். புறவழிச்சாலையில் இருந்தும், ஓ.எம்.ஆர். பகுதியில் இருந்தும் பயணிகள் மாமல்லபுரம் நகருக்குள் வருவதற்கு வசதியாக மினி பஸ் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீச்சல் தெரிந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பெண்களை கேலி செய்வோர், பாலியல் சீண்டல் செய்வோரை கண்காணித்து பிடிக்க சாதாரண உடையில் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை இலவசமாக அனுமதிக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம், உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40-ம் வசூலிக்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள பழவேற்காட்டில் இன்று காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் பழவேற்காட்டில் உள்ள டச்சு கல்லறை நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கோவளம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள் ஆகிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக இன்று 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.