தமிழ்நாடு

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2025-01-16 10:10 IST   |   Update On 2025-01-16 10:10:00 IST
  • குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது.
  • நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி பூக்கள் பூக்கும். மேலும் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறுகுறிஞ்சி என 20-க்கும் மேற்பட்ட குறிஞ்சி இனங்கள் உள்ளன. இந்த குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலும் உள்ளது. இதில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்தில் இருந்து 1200 முதல் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.

இந்நிலையில் ஆண்டுதோறும் பூக்கும் ஸ்ட்ரோ பிலாந்தஸ் கார்டி போலீயோ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பூக்கும் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களிலான குறிஞ்சி மலர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது. இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது. அதில் தற்போது வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைப்பகுதி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றன. நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர். ஆனால் நீல குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். தற்போது பூத்துள்ள மலர்கள் அந்த வகையை சேர்ந்தது இல்லை என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News