தமிழ்நாடு

பொங்கலையொட்டி முனியாண்டி கோவிலில் 100 ஆடு, 150 கோழிகள் பலியிட்டு அன்னதான விருந்து

Published On 2025-01-16 10:42 IST   |   Update On 2025-01-16 10:42:00 IST
  • அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
  • மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று இந்த கோவிலில் பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 62-வது பொங்கல் திருவிழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேளரா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 250 பெண்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோபாலபுரம், செங்கபடை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

இதற்கிடையே மாலை 5 மணியளவில் கோபாலபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது. கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் இதில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவில் நோக்கி கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

பல பெண்கள் சாமியாடியபடியே ஊர்வலகத்தில் பங்கேற்றனர். மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டு வந்திருந்த தேங்காயை உடைத்து முனியாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News