சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
- அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
மகர விளக்கு பூஜை கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மாலை சபரிமலையை வந்தடைந்த திருவாபரணபெட்டியில் இருந்த திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க கண்டுகளித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.