வழிபாடு

மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-28)

Published On 2025-01-12 08:10 IST   |   Update On 2025-01-12 08:10:00 IST
  • குறைகள் இல்லாத கோவிந்தனே!
  • கிடைத்தற்கரிய முதலும், நடுவும், முடிவும் ஆனவனே!

திருப்பாவை

பாடல் :

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்!

அறிவொன்றும் இல்லாத ஆயக்குலத்து

உன் தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்;

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

உன்தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

இறைவா! நீதாராய் பறையலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

குறைகள் இல்லாத கோவிந்தனே! எந்தவித ஞானமும் இல்லாத ஆயர்குலத்தில் நீ வந்து பிறக்க, நாங்கள் புண்ணியம் செய்துள்ளோம். பசுக்களின் பின்னே சென்று காட்டிற்குப் போய் கூடி உண்ணும் நாங்கள், உன்னோடு கொண்ட உறவினை ஒரு போதும் அறுக்க இயலாது. அன்பின் காரணமாக உன்னைச் சிறு பெயர்களால் (ஒருமையில்) அழைத்ததற்காக கோபம் கொள்ளாமல், இறைவனாகிய நீ எங்களுக்கு அருளோசையை தந்தருள்வாய்.

திருப்பள்ளியெழுச்சி

பாடல்:

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?

பந்தணை விரலியும்,நீயும்நின் அடியார்

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே!

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கம்:

கிடைத்தற்கரிய முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! காத்தல், படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பிரம்மா, திருமால், ருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய மாட்டார்கள்; எனில் பின் வேறு யார் தான் அறிந்திடுவார்? வேதங்களாகிய பந்தினை தன் கைவிரல்களால் பிடித்து விளையாடும் உமையவளோடு, உனது அடியவர்களின் இல்லம் தோறும் எழுந்தருள்பவனே! எனக்கு நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைக் காட்டி, திருப்பெருந்துறை கோவிலையும் காட்டி, பின் குருவாகவும் காட்சி தந்து, என்னை ஆட்கொண்டு அருளினாய். நீ உனது துயில் நீங்கி எழுந்தருள்வாயாக!

Tags:    

Similar News