வழிபாடு

மகரவிளக்கு பூஜை: சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்ல 4 நாட்கள் தடை

Published On 2025-01-10 11:08 IST   |   Update On 2025-01-10 11:08:00 IST
  • 14-ந்தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.
  • திருவாபரணங்கள் நாளை மறுநாள் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை கடந்தமாதம் 31-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாகவே அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிவவுகிறது. மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவ சம்போர்டு மேற்கொண்டு வருகிறது.

மகரவிளக்கு பூஜை நடக்கும் 14-ந்தேதி ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். அந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள்(12-ந்தேதி) பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இதனையொட்டி பக்தர் களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அய்யப்பனுக்கு அணிவிக் கப்படும் திருவாபரணங்கள் பாரம்பரிய பாதையான பெருவழிப்பாதை வழியாகத் தான் சபரிமலைக்கு கொண்டு வரப்படும். இதனால் நாளை (11-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை பக்தர்கள் பெருவழிப் பாதையில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை வரையே பக்தர்கள் பெருவழிப்பாதை வழியாக செல்ல அனுமதிக் கப்படுவார்கள். அதன்பிறகு 14ந்தேதிக்கு பிறகே பெரு வழிப்பாதை வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல முடியும். நாளை முதல் 14-ந்தேதி வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு செல்லலாம்.

பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு திருவாபரணம் கொண்டு செல்லப்படும் நாளான 14-ந்தேதி பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு செல்லவும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும்.

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பம்பையில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப் படுகிறது. நாளைமறுநாள் (12-ந்தேதி) காலை 8 மணி முதல் வருகிற 15-ந்தேதி மதியம் 2 மணி வரை பம்பை மலை உச்சியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.

மகரவிளக்கு பூஜைக்காக அதிகளவில் பக்தர்கள் வந்தபடி இருப்பதால் ஸ்பாட் புக்கிங் நேற்று முதல் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மகரவிளக்கு நாளான 14-ந்தேதி ஸ்பாட் புக்கிங் 1,000-ஆக குறைக்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News