மோட்சத்தை வழங்கும் வைகுண்ட ஏகாதசி
- வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
- விஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு அழகான பெண் தோன்றினாள். அவள் தான் ஏகாதசி.
மகாவிஷ்ணுவை வழிபடும் விரதங்களில் முக்கியமானதாக, வைகுண்ட ஏகாதசி இருக்கிறது. மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசியானது, மோட்சத்திற்கான ஏகாதசி' என்று போற்றப்படுகிறது.
அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். இறைவனை வழிபட்டு, இந்த வாசல் வழியாக வெளியே வருபவர்களுக்கு, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏகாதசி தோன்றிய கதை
முரண் என்ற அசுரன், பல காலம் தவம் செய்து மிகப்பெரும் அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அந்த சக்தியைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தினான்.
எனவே 'முரணை அழிக்க வேண்டும்' என்று சகல முனிவர்களும், தேவர்களும் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் முரண் முன்பாக தோன்றி, அவனோடு கடும் யுத்தம் செய்தார். ஆனால் அவனை அழிக்க முடியவில்லை.
ஏனெனில் முரண் பெற்றிருந்த வரங்களில், அவனுக்கு பெண்ணால்தான் மரணம் நிகழும் என்பதும் அடங்கும். இதையறிந்த மகாவிஷ்ணு, இனி போர் புரிந்து பயன் இல்லை என்பதை உணர்ந்தார்.
எனவே ஹிமாவதி என்னும் குகைக்குள் சென்று யோக நித்திரையில் ஆழ்ந்தார். அவர் நித்திரையில் இருந்த நேரத்தில் அவரைக் கொல்ல வந்தான் முரண். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு அழகான பெண் தோன்றினாள். அவள் முரணுடன் போரிட்டு, அவனை எரித்துக் கொன்றாள்.
முரணுடன் போரிட்ட விஷ்ணுவிடம் இருந்து 11-ம் நாள் தோன்றியதால், அந்த பெண் 'ஏகாதசி' என்று அழைக்கப்பட்டாள். அவளிடம் விஷ்ணு, "உனக்கு என்ன வரம் வேண்டுமோ, அதைக் கேட்டு பெற்றுக்கொள்" என்றார்.
அப்போது ஏகாதசி, "முரண் அழிந்த இந்த தினத்தில், யார் உங்களது பெயரைச் சொல்லி கொண்டாடுகிறார்களோ, விரதம் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் மோட்சத்தை தந்தருள வேண்டும்" என்று கேட்டாள். அதன் காரணமாக ஏகாதசியும், அந்த நாளில் இருக்கும் விரதமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏகாதசியின் பெருமை
துர்வாச முனிவருக்கு ஆயிரம் சீடர்கள் உண்டு. அவர் தவத்தில் சிறந்தவராக இருந்தார். அவரிடம் இருந்த ஒரே குறை, அவருக்கு ஏற்படும் கோபம் தான். அந்த கோபத்தால் அவர் பிரசித்தி பெற்றவராகத் திகழ்ந்தாலும், அதே கோபம்தான் அவரை சிக்கலிலும் தள்ளி இருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் இது.
ஒரு முறை துர்வாசர், அம்பரீஷ மகாராஜா ஆளும் தேசத்தை அடைந்தார். அந்த மன்னன், விஷ்ணுவின் மீது அதீத பக்தி கொண்டவர். அவரது அரண்மனையில் தன்னுடைய சீடர்களுடன் வந்து தங்கினார், துர்வாசர்.
அன்று அம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலை துவாதசியில் விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் துர்வாசர் தன் சீடர்களுடன் நதிக்கு நீராட சென்று விட்டார்.
ஆனால் அன்று காலை துவாதசி பாரணையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில், அம்பரீஷ மன்னன் இருந்தார். துர்வாச முனிவரின் எண்ணம் வேறாக இருந்தது.
'அம்பரீஷனுக்கு நம் கோபம் தெரியும். எனவே நாம் உணவருந்தாமல் அவன் துவாதசி பாரணையை முடிக்க மாட்டான். மகாராஜாவாக இருந்தாலும், அவன் நமக்காக காத்திருக்கட்டும்' என்று கருதியவர், அரண்மனை திரும்புவதற்கு காலம் தாழ்த்தினார்.
அம்பரீஷ மகாராஜனோ கலக்கத்தில் இருந்தார். 'ஏகாதசி விரதத்தை பூர்த்தி செய்யாவிட்டால், இத்தனை ஆண்டு காலமாக கடைப்பிடித்து வரும் விரதத்தில் தடை ஏற்படுமே என்று வருந்தினார்.
இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். துர்வாச முனிவரும், அவரது சீடர்களும் உணவருந்தும் முன்பாக, நாம் உணவருந்துவது சரியாக இருக்காது. அதே நேரம் துவாதசி பாரணையையும் முடிக்க வேண்டும்.
எனவே பெருமாளுக்கு சமர்ப்பித்த துளசி தீர்த்தத்தை உட்கொண்டு, தன்னுடைய துவாதசி பாரணையை முடித்தார். அம்பரீஷ மகாராஜா.
வெகு தாமதமாக வந்த துர்வாசர், துளசி தீர்த்தத்தை உட்கொண்டு அம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதத்தை முடித்தது தெரியவந்ததும் கடும் கோபம் கொண்டார். "விருந்தினர்களுக்கு உணவளிக்காமல், நீ எப்படி சாப்பிடலாம்.
துளசி தீர்த்தமாக இருந்தாலும், அதை நீ செய் திருக்கக்கூடாது" என்று கடுமையாக கோபப்பட்டவர்.
தன் தலைமுடியில் இருந்து ஒரு முடியை எடுத்து சில மந்திரங்களை உச்சரித்தார். அது ஒரு பெரிய பூதமாக உருமாறியது.
அந்த பூதம், அம்பரீஷ மகாராஜாவை விழுங்க வந்தபோது. 'இறைவனின் திருவடி தான் நம்மை காப்பாற்றும்' என்பதை உணர்ந்து, மகாவிஷ்ணுவின் திருநாமத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
அப்போது அங்கே மிகப்பெரிய ஒளி பிரவாகம் தோன்றி, அதனுள் இருந்து சுதர்சன சக்கரம் வெளிப்பட்டது. அது பூதத்தை தன் நெருப்பால் எரித்தது. அதோடு நில்லாமல், மகாவிஷ்ணுவின் பக்தனையே கொல்ல நினைத்த துர்வாசரையும் துரத்தியது.
சுதர்சன சக்கரத்திற்கு பயந்து, பூலோகம், புவர் லோகம். சுவர்லோகம், மகாலோகம், தபோ லோகம், இந்திரலோகம் என்று ஈரேழு உலகங்களுக்கும் ஓடிய துர்வாசர், இறுதியாக வைகுண்டம் சென்று நாராயணனின் பாதத்தில் சரணடைந்தார்.
ஆனால் நாராயணரோ, "ஆண்டவனை நாம் மரியாதைக் குறைவாக நடத்தினால், அந்த பாவத்தை அடியார்களுக்கு செய்யும் தொண்டின் மூலமாக போக்கிக் கொள்ள முடியும். ஆனால் அடியார்களுக்கு கெடுதல் நினைத்தால், அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. எனவே துர்வாசரே.. நீ, அம்பரீஷ மகாராஜனிடமே சென்று முறையிடு" என்றார்.
துர்வாச முனிவருக்கு வேறு வழியில்லை. வைகுண்டத்தில் இருந்து புறப்பட்ட அவர், அடுத்ததாக நின்ற இடம் அம்பரீஷனின் அரண்மனைதான். "அம்பரீஷா.. என் ஆணவத்தை பொறுப்பாய். என் தவம் அனைத்தும் உனது ஏகாதசி விரதத்தின் முன் பலனற்று போய்விட்டது.
இறைவனின் பக்தனுக்கு உரிய சக்தியை நான் உணர்ந்து கொண்டேன். சுதர்சன சக்கரம் என்னை துரத்தி வருகிறது. நீதான் என்னைக் காக்க வேண்டும்" என்றார்.
உடனே அம்பரீஷ மகாராஜா, விஷ்ணு பகவானுக்குரிய நாமங்களை உச்சரித்து அவரை நோக்கி தியானம் செய்தார். இதையடுத்து சுதர்சன சக்கரம் விலகிச் சென்றது.
வைகுண்ட ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவர்கள். அன்றைய தினம் தங்களின் சக்திக்கு ஏற்ற வகையில் 'ஒம் நமோ பகவதே வாஸுதேவாய என்ற மந்திரத்தை. 28 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.