வழிபாடு

மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-26)

Published On 2025-01-10 08:17 IST   |   Update On 2025-01-10 08:17:00 IST
  • எங்களிடம் பேரன்பு கொண்ட திருமாலே! மணிவண்ணா!
  • பிறவியை நீக்கி எம்மை ஆட்கொள்ளுகின்ற எங்கள் எம் பெருமானே!

திருப்பாவை

பாடல்:

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்;

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே,

சாலப் பெரும்பறையே; பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

எங்களிடம் பேரன்பு கொண்ட திருமாலே! மணிவண்ணா! மார்கழி நோன்பை நோற்க, நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கப் போவதில்லை. பெரியவர்கள் விதித்துள்ளவற்றுள் நாங்கள் வேண்டுவதைக் கேட்பாயாக! உலகையே நடுங்கச் செய்யும் உன் பாஞ்சஜன்யம் போன்ற வெண்சங்குகள், உன் புகழைப் பாடவல்ல பெரிய பறை முரசுகள், பல்லாண்டு பாடும் பாடல் கலைஞர்கள், அழகிய விளக்குகள், கொடிகள், குடைகள் ஆகியவற்றை ஆலிலையில் அவதரித்த நீ எங்களுக்கு அருள வேண்டும்.

திருவெம்பாவை

பாடல்:

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தார்அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்கு கின்றார்; அணங்கின் மணவாளா!

செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கம்:

நிலமற்ற இடத்தில் தவம் செய்து உன்னை உணர்ந்த யோகியரும், பந்த பாசங்களை உதறியவர்களும், மை தீட்டிய கண்களுடைய பெண்டிரைப் போன்று தங்களைப் பாவித்துக் கொண்டு உன்னைத் தொழுகிறார்கள். உமையம்மையின் மணவாளனே! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆட்கொள்ளுகின்ற எங்கள் எம் பெருமானே! சிவந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள வயல்கள் சூழ்ந்திருக்கும் திருப்பெருந்துறையில் உறைந்தருளும் சிவபெருமானே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்.

Tags:    

Similar News