- பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தியர்’ என்பர்.
- சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார்.
காசிப முனிவருக்கும் அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவவான் முதலான பன்னிரண்டு சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்கள் ஆதலால் பன்னிரு சூரியர்களையும் 'ஆதித்தியர்' என்பர்.
பிரம்மதேவன் ஒரு காலத்தில் இருள் மயமான அண்டத்தைப் பிளந்தார். அப்போது அவ் அண்டத்திலிருந்து 'ஓம்' என்றப் பேரொலி எழுந்தது. அவ்வொலியில் இருந்து ஒளி உருவமாக சூரியன் தோன்றினான். இவ்வாறே சூரிய பகவானின் முதல்தோற்றம் நிகழ்ந்தது என மன மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.
பன்னிரு சூரியர்களில் முதலாமவராகிய விசுவவான் என்ற சூரிய பகவான் துவஷ்டாவின் மகளான சஞ்ஞீகை (உஷா) என்பவரை மணந்துகொண்டார். சஞ்ஞீகையின் திருவயிற்றில் வைத்சுதமனு, யமன், அசுவினி தேவர்கள் ஆகியோர் பிறந்தனர்.
சூரியனின் சூடு (வெப்பம்) தாங்க இயலாதவளாகிய சஞ்ஞீகை தன்னுடைய நிழலையே ஒரு பெண்ணாக உருவாக்கினாள். அவளைத் தனக்குப் பதிலாக சூரியனுக்குத் தெரியாமலே அவரிடம் இருக்கச் செய்து சஞ்ஞீகை தந்தை வீடு சென்றுவிட்டாள்.
சஞ்ஞீகையின் நிழலாகத் தோன்றிய அப்பெண்ணிற்குச் சாயாதேவி (பிரத்யுஷா) என்ற பெயர் வழங்கலாயிற்று. சாயாதேவி தான், வேறொரு பெண் என்ற விபரத்தை அறிவிக்காமலே ஆதித்தியரிடம் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து வந்தாள். சூரியனும் அவளைச் சஞ்ஞீகை என்றே நினைத்து நெடுநாட்கள் வாழ்ந்துவந்தான்.
சாயாதேவிக்கு சாவர்ணியமனு, சனி என்ற மகன்களும் பத்திரை என்ற மகளும் பிறந்தனர்.
ஒரு சமயம் சூரியன் தன் மகனான எமனால் சாயாதேவி தோன்றிய உண்மை வரலாற்றை அறிந்தார். உடனே உஷாதேவியின் தந்தையான துவஷ்டாவிடம் சென்று உஷாதேவி இருக்குமிடத்தை அறிந்து கொண்டு அங்கே விரைந்தார்.
அடர்ந்த காட்டில் பெண் குதிரை உருவத்தில் உஷாதேவி தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். பின்னர் அவரிடம் பேசி அன்போடு அழைத்து வந்து அவள் விருப்பப்படி இருவரோடும் இன்பமுடன் இல்லறம் ஏற்றருளினார். இவ்விரு தேவிகளே சூரியனிடம் என்றும் பிரியாதிருந்து அருள் செய்கின்றனர்.
சூரியனுக்கு மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன. சூரியனுக்கும் சருஷிணிக்கும் பிறந்தவர்கள் பிருகு, வால்மீகர் ஆவர். சூரியனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்கள் அகத்தியரும், வால்மீகியும் ஆவர்.
சூரியனுக்கும் குந்திதேவிக்கும் பிறந்தவன் கர்ணன் என்று பாரதமும், சுக்ரீவன் சூரியக்குமாரனே என்று ராமாயணமும் கூறுகின்றன.
சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து 'கிரகபதம்' எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் சிவனருளால் பெற்றார். அதனால் சூரியன் தம் ஆயிரம் கிரகணங்களால் இருளை அழிக்கவும் ஒளியை உண்டாக்கவும் வெப்பத்தைத் தரவும் கூடிய வல்லமை பெற்றார்.
1000 கிரகணங்களில் 400 கிரகணங்கள் மழை பொழிவதற்கும், 300 கிரகணங்கள் மழை வளம் உண்டாக்குவதற்கும் 300 கிரகணங்கள் பனி பொழிவதற்கும் பயன்படுகின்றன என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் சமயமே மாதப் பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றன.
சித்திரை மாதப் பிறப்பைச் சித்திரை விசு என்றும் ஐப்பசி மாதப் பிறப்பை 'ஐப்பசி விசு' என்றும் கூறுவர். இவ்விரு மாதப் பிறப்புகளுக்கு முன் எட்டு நாழிகைகளும் பின் எட்டு நாழிகைகளும் புண்ணிய காலங்களாகும்.
தட்சிணாயணம் தொடங்கும் ஆடி மாதப் பிறப்பின் முன் 16 நாழிகையும், உத்ராயணம் தொடங்கும் தை மாதப் பிறப்பின் பின் 16 நாழிகைகளும் புண்ணிய காலங்கள்.
சூரியன் மகர ராசியில் (தை மாதம்) இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, திருவோணம் நட்சத்திரம், வியதீபாத யோகம் ஆகிய நான்கும் கூடினால் அது அர்த்தோதய புண்ணிய காலமாகும்.
சூரியன் மகரராசியில் இருக்கும்போது திங்கட்கிழமை, அமாவாசை, திருவோணம், வியதீபாதம் ஆகியவை கூடியவரின் மகோதய புண்ணிய காலமாகும்.
இக்காலங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சூரிய வணக்கம் செய்து இறைவழிபாடு, தியானம் முதலியன செய்தால் பல பிறவிகளில் செய்த வினை நீங்கும். பெரும் புண்ணியங்கள் சேரும் என்று ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன.