வழிபாடு

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்:14-ந்தேதி தேரோட்டம்

Published On 2025-01-06 10:12 IST   |   Update On 2025-01-06 10:12:00 IST
  • 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது.
  • நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலம்.

சுவாமிமலை:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

'பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் 'சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா, சித்திரை பெருவிழா ஆகியவை வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


முன்னதாக உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், நாதஸ்வர மேளதாளம் முழங்க கொடிக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.முக்கிய நிகழ்வாக வருகிற 10-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசனமும், 14-ந்தேதி தைப்பொங்கல் தினத்தன்று தேரோட்டமும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிவசங்கரி, உதவி ஆணையர் சாந்தா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News