மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-22)
- உன் சிவந்த கண்களை சிறிதளவாவது திறந்து எங்களைப் பார்க்கக் கூடாதா?
- திருப்பெருந்துறையில் உறைந்தருளும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண்ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
அழகிய பெரியதான உலகத்தில் உள்ள பேரரசர்கள் எல்லாம் தங்களது செருக்குகள் களைந்து, உன் கட்டிலின் அருகில் கூடியிருப்பது போல, நாங்களும் உன்னைச் சரணடைய வந்திருக்கிறோம். சலங்கையைப் போலவும், சிறிதே இதழ்கள் திறந்த தாமரையைப் போலவும் இருக்கும் உன் சிவந்த கண்களை சிறிதளவாவது திறந்து எங்களைப் பார்க்கக் கூடாதா? சூரியனும் சந்திரனும் ஒருங்கே உதித்தது போல் இருக்கும் உன் இரு கண்களாலும் எங்களை நோக்கினால் எங்களின் எல்லா சாபங்களும், பாவங்களும் நீங்கி நாங்கள் தூய்மையடைவோம்.
திருவெம்பாவை
பாடல்:
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலர, மற்றண்ணல்அங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!
அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே!
விளக்கம்:
கருட தேவரின் அண்ணனாகிய அருணன் சூரியதேவனின் தேரை செலுத்துவதற்காக கீழ்திசை வந்து விட்டான். இருள் விலகி, உன் திருமுகத்துக் கருணையைப் போன்ற ஒளிக்கற்றைகளைப் பாய்ச்ச சூரியனும் எழுந்து விட்டான். உனது திருக்கண்களைப் போன்ற மலர்கள் மலர்ந்து விட்டன. அந்த மலர்களில் உள்ள தேனைக் குடிப்பதற்காக வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. திருப்பெருந்துறையில் உறைந்தருளும் சிவபெருமானே! அருட் செல்வத்தை தந்தருளும் ஆனந்த மலை போன்றவனே! அலை வீசும் கடல் போன்றவனே! துயில் நீங்கி எழுந்தருள்வாய்!