திருவண்ணாமலையில் உத்தராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அலங்கார ரூபத்தில் சாமி அம்பாள் எழுந்தருள, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.
மாட்டு பொங்கல் தினத்தன்று சாமி அம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி தந்து மாட வீதியில் வலம் வருவர். மாடவீதியில் 3 முறை வலம் வந்த பின்னர் மாலையில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும்.
மாட்டுப் பொங்கல் தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமான் பலகாரங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருவார்.