சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- சிதம்பரம் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம்.
- தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திரு மஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.
இதனையத்து நாளை சந்திர பிரபை வாகன வீதியுலா, 6-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா ஆகியன நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 12-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், 13-ந் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்சபை பிரவேசமும் நடைபெறும். தொடர்ந்து 14-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலா, 15-ந் தேதி தெப்போற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் குழு செயலர் வெங்கடேச தீட்சிதர், துணைச்செயலர் சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியர் சிவராஜ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் செய்து இருந்தனர்.