தமிழ்நாடு

`சீமான் கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார்' - பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம்

Published On 2025-01-06 12:46 IST   |   Update On 2025-01-06 12:46:00 IST
  • தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு.
  • அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமானன பபாசி சார்பில் 48-வது சென்னைப் புத்தகக்காட்சி, கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி சென்னை நந்தனம் ஒ.ய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.

இந்த கண்காட்சி வருகிற 12-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக காட்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது புது நூல் அறிமுகம் நடைபெறும். அந்த வகையில், டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்தேசியம் குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.


அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான 'நீராருங் கடலுடுத்த' பாடலுக்குப் பதிலாக வேறு ஒரு பாடல் பாடப்பட்டது குறித்த சர்ச்சையும் கிளம்பியது.

இதனையடுத்து, புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் புறக்கணிப்பட்டு புதுச்சேரி அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் காரணம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஸ்கவரி புக் பேல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் வேடியப்பன் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பபாசி தலைவர் சொக்கலிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரையும் ஒருமையிலும் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தின் தமிழ்த்தாய் பாடலையும் பாடியதற்கும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இன்று அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலையை, இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாடு அரசின் மீது பபாசிக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனவே தனிப்பட்ட முறையில் டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய நிகழ்விற்கு பபாசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என விளக்கம் அளித்தார்.


இந்த சர்ச்சை தொடர்பாக பபாசி தலைவர் சொக்கலிங்கம் நந்தனம் புத்தக கண்காட்சியில் நடந்த பேட்டியில் கூறியதாவது:-

சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே, இது அரசியல் மேடை அல்ல, இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுமாறு அறிவுறுத்தினேன்.

மேலும் புத்தக பதிப்பக நிறுவனம் அழைத்துவரும் நபர் அரசியல் பேசக் கூடாது என பதிப்பாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வருடத்தில் நடக்காதது ஒன்று இப்போது நடந்துள்ளது. புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த சீமான் எப்படி இதை செய்யலாம். அவருடைய கண்ணியத்தை காக்க அவர் தவறிவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பபாசி பொதுச் செயலாளர் முருகன் பேசியதாவது:-

சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக காட்சி பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம்.

இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது"

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News