ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?
- ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற திமுக அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுபடும்.
- ஜனவரி 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
இடைத்தேர்தலுக்காக வருகிற 10-ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கும். 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனு மீதான பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும் என்றும், 20 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மு.க.ஸ்டாலின் உடன் கலந்து பேசி முடிவு எடுக்கப் படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா இல்லை புறக்கணிக்குமா என்பது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற திமுக அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுபடும். தேர்தல் ஜனநாயக மரபுபடி நடக்காது. ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜனவரி 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக தலைமை முடிவு எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.