'சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா' அனைவரும் வாரீர்!- கனிமொழி
- கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
- சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா" என்ற பிரமாண்ட கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி கிராமப்புறங்களில் நாட்டுப்புற கலைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் காலங்காலமாக நடைபெற்று வரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் நாட்டுப்புற கலைகளை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இன்றைய இளைய சமுதாயத்திற்கு தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சென்னையில் "நம்ம ஊர் திருவிழா" நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள சென்னைவாசிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடத்துவதற்கு தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரஸ்வரர் கோவில் திடலில் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ் மண்ணின் கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடி மகிழ "சென்னை சங்கமம் 2025" மாபெரும் கலைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அனைவரும் வாரீர்! என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் 18 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து மாபெரும் இசை நடன நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
நம்ம ஊர் திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம் ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம்.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.
இவற்றுடன் மகாராஷ்டிர மாநில லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோரம் மூங்கில் நடனம் ஆகியவை இடம்பெறுகின்றன.