கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடக்கம்
- கரும்பு, மஞ்சள், மண்பாளை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
- விற்பனையின் போது வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் 16-ந்தேதி வரை சிறப்பு சந்தை செயல்படுகிறது. விழுப்புரம், கடலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள், மண்பாளை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மட்டுமின்றி மற்ற பகுதி வியாபாரிகளும் பொருட்களை கொண்டு வந்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள் என கருதப்படுவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் ஈடுபட உள்ளனர்.
மேலும் விற்பனையின் போது வியாபாரிகள் கொடுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பொருட்களை விற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.