நகைகள் மூலம் திருக்கோவிலுக்கு ரூ.11 கோடி வருமானம்- அமைச்சர் சேகர் பாபு
- 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்.
- 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது, ஆலங்குளம் தொகுதி நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பூலாங்குளம் காளியம்மன் கோவில் மற்றும் பாப்பாக்குடி திருக்கடுக்கை முன்றீஸ்வரர் கோவில் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, "அம்மனுக்கு ஒன்று, ஈஸ்வரனுக்கு ஒன்று, முருகனுக்கு ஒன்று இந்த மூன்று கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். அவர் கேட்ட சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் முடிவு பெற்றது. மற்ற 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என பதில் அளித்தார்.
உச்சி மாகாளியம்மன் கோவிலில் சிலை பாதுகாப்பையும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கேட்ட திருமனீஸ்வரர் கோவிலில் 1942-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது, வல்லுனர் குழு தொழில்நுட்ப குழு அனுமதி செய்யப்பட்டு 40 லட்ச ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் கேட்ட வெங்கடாஜலபதி கோவில் என்பது 1000 ஆண்டுகளுக்கு மேலான கோவிலுக்கு அரசு விடுத்த 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான பணிகள் நடைபெறும் என பதிலளித்தார்.
மனோஜ் பாண்டியன் தொடர்ந்து பேசியதாவது, கோவிலில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்களை உருக்கி அதை தங்க கட்டிகளாக மாற்றி அதை டெபாசிட் செய்வதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ள தா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறியதாவது:-
தங்க நகைகளை உருக்குவதற்கான அரசாணை 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பக்தர்களிடம் இருந்து வரும் பயன்பாட்டு இல்லாத தங்க நகைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தார். 3 நீதிபதிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த திட்டம் அறிவிக்கப் பட்டவுடன் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அனைத்து கோவில் வாசல்களில் அம்மன் சிலையை அமைத்து அதில் நகைகளை பறிப்பது போல் கார்ட்டூன் வைத்தார்கள்.
நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். அதைவிடாதே பிடி என்றார். அதை பிடித்ததின் காரண மாக இன்று 1,100 கிலோ அளவிற்கு வங்கியில் வைப்பு நிதியாக தங்கம் வைக்கப்பட்டு ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் கோவிலுக்கு வருமானமாக வருகிறது.
மேலும் இந்த திட்டம் தொடரும். 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி இதுவரை யில் கோவில்களில் வைக்கப் பட்டுள்ள மொத்த அளவு 610 கிலோ. ஆனால் இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் வைப்பு நிதியாக வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அளவு 1,110 கிலோ என பதில் அளித்தார்.