இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் காதல் ஜோடி
- சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இமிங், சு ஹூவா ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
- இருவரின் உறவினர்களும் பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுப்படி மணமக்களை வாழ்த்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த இமிங், சு ஹூவா ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பினர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்த இருவரும் சீர்காழி அருகே உள்ள ஒளிலாயம் சித்தர் பீடத்தில் நேற்று சிவாச்சாரியார்கள் அருண், கணேஷ் முன்னிலையில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நாட்டில் இருந்து வந்திருந்த இருவரின் உறவினர்களும் பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுப்படி மணமக்களை வாழ்த்தினார். தைவான் நாட்டை சேர்ந்தவர்களின் திருமணத்தில் சுற்று வட்டார பகுதி கிராம மக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.