தமிழ்நாடு

அடிப்படை 'டேஷ்' இல்லாமல் பேசும் சீமான் - வருண்குமார் IPS தரப்பு வழக்கறிஞர் விமர்சனம்

Published On 2025-01-07 20:35 IST   |   Update On 2025-01-07 20:35:00 IST
  • சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார்.
  • ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?

திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் "சீமான் தன்னையும் தனது குடும்பத்தினரையும் பல்வேறு பேட்டிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியும் தனிப்பட்ட விதத்தில் மிரட்டுவதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி இள்ளோம். எனவே சீமான் தனக்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் .அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தமிழ்நாடு சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன்; அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன்.

சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என்று வருண்குமார் கூறினார்.

இதனையடுத்து சீமானிடம் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், "நீதான் பெரிய அப்பா டக்கர்... இவராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல... நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம். குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.

தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா... அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே...

நீங்கள் பேசுங்க... அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு... மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது. நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ... தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா...பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின..." என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

இந்நிலையில் சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது டிஐஜி வருண்குமார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வருண் குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார். ஐ.பி.எஸ். என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். அடிப்படை டேஷ் அறிவு இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை" தெரிவித்தார்.

Tags:    

Similar News