விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தால் தி.மு.க.வின் வாக்குகள் சிதறும்- கே.டி.ராஜேந்திரபாலாஜி
- தி.மு.க. கூட்டணி சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது.
- தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே வள்ளியூர் குமாரலிங்க புரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி தற்போது சிதறிய தேங்காய் போல உடைந்து வரும் நிலையில் உள்ளது. இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்றும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் ஏதும் செய்து விட்டீர்களா? என்றும் பேசியிருக்கிறார்.
அரசின் ஒரு தவறைக்கூட சுட்டிக் காட்ட முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை 48 மணி நேர சோதனையை நடத்தியது.
தற்போது பட்டாசு தொழிலாளர்கள் பதறிப் பயந்து போய் வேலை செய்வதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. தி.மு.க. அரசு வந்த பிறகு தான் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.
தி.மு.க. அரசால் தான் பட்டாசு தொழில் அழிந்து வருகிறது. அதேபோல் நெசவு தொழிலாளர்களுக்கு போதிய அளவில் நூல் கிடைக்கவில்லை, விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்தவர்கள் வருகிற தேர்தலில் சரியான பாடம் புகட்டு வார்கள்.
தமிழகத்தில் 234 தொகுதி களில் 200 தொகுதிகளை தி.மு.க. கைப்பற்றும் என்று பேசி வருவது சரியல்ல. 200 தொகுதிகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.
மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யால் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, மாறாக தி.மு.க. ஓட்டுகள் தான் சிதறும். அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் வராது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.