தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்

Published On 2025-01-07 14:56 IST   |   Update On 2025-01-07 14:56:00 IST
  • விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள்.
  • திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலைமை இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறை மூலம் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை அமைத்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்தை கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் இந்த பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு தற்போது படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு விவேகானந்தர் பாறையில் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கரைக்கு திரும்பி வந்து விடுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் அதே பாலம் வழியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து அங்கிருந்து படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்கள்.

கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News