அண்ணா பல்கலை. விவகாரம்: ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- வேல்முருகன்
- மாணவி வன்கொடுமை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வாய் திறக்கவில்லை?
- தொழில்நுட்ப கோளாறால் எஃப்.ஐ.ஆர். வெளியானது என்பதை ஏற்க முடியாது.
தமிழக சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில்,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பதிவாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சம்பந்தப்பட்ட நபர் பாதுகாவலர்களை மீறி பல்கலைக்கழகத்திற்குள் எப்படி சென்றார். சிசிடிவி நிலை என்ன? மாணவி கல்வி, பாதுகாப்புக்கு அரசு உறுதி அளிக்க வேண்டும். யார் அந்த சார் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று பேசினார்.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு,
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் ஓரிரு வரிகளில் பேசவும் என்று பேசினார்.
எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசுகையில்,
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்திற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆளுநரின் ஆளுகைக்கு கீழ் உள்ள பல்கலைக்கழகத்திற்கு நடந்த வன்கொடுமைக்கு அவரே பொறுப்பு.
ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்யக்கூட அனுமதியில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வாய் திறக்கவில்லை? மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநரின் செயலில் சந்தேகம் உள்ளது. யார் அந்த சார்? என்பது தெரிய வேண்டும் என்று பேசினார்.
எம்.எல்.ஏ. கொங்கு ஈஸ்வரன் பேசுகையில்,
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அந்த சார் ஆளுநராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலை. உள்பட பல கல்லூரிகளில் துணைவேந்தர்கள் இல்லை என்று பேசினார்.
மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலை பேசுகையில்,
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரும் பணியை மாநில அரசு செய்து கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழத்தில் நிறைய கட்டுப்பாடுகள் விதித்து தொடர்ந்து கவனிக்கப்படுகிறது என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.மாரிமுத்து பேசுகையில், யாராக இருந்தாலும் சட்டத்தின்பிடியில் இருந்து தண்டிக்க வேண்டும் என்று பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி எம்.எல்.ஏ. பேசுகையில்,
தொழில்நுட்ப கோளாறால் எஃப்.ஐ.ஆர். வெளியானது என்பதை ஏற்க முடியாது. குற்றவாளி செல்போனில் உரையாடிய நபரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று பேசினார்.
வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் பேசுகையில்,
சிசிடிவி விவகாரத்தை தாண்டி குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆளுநர் என்ற அடையாளத்தின் மூலம் தமிழகத்தில் கல்வி கட்டமைப்பின் மீது மோசமான தாக்குதல் நடக்கிறது என்று பேசினார்.