ஞானசேகரன் வீடு உள்பட கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேலும் 21 வீடுகள்
- கோட்டூர்புரம் லேக்வியூ ஏரிக்கரை பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தனர்.
- ஞானசேகரன் வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கினை ஐகோர்ட்டு நியமித்த 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் கொண்ட புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இவர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோட்டூர்புரம் லேக்வியூ ஏரிக்கரை பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சிக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் ஞானசேகர் வீடு குறித்த அறிக்கையை வருவாய்த்துறையிடம் கேட்டனர். அதனடிப்படையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் ஞானசேகரன் வீட்டினை அளந்து, ஆவணங்களை பார்த்தனர்.
அப்போது அந்த வீடு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலம், அந்த கோவிலுக்குதான் சொந்தமானது. கோவில் நிலத்தில்தான் ஞானசேகரன் 3 மாடி வீடு கட்டியுள்ளார். இது கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடு என்பதால், வருவாய்த்துறையினர் அறிக்கை ஒன்றை தயாரித்து, அதனை அறநிலையத்துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். எனவே இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை தனது விசாரணையை தொடங்க உள்ளது.
இந்நிலையில் கோட்டூர்புரத்தில் ஞானசேகரன் வீடு உள்பட மேலும் பல வீடுகள் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
ஞானசேகரனின் வீட்டை அளவீடு செய்த நிலையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து 21 வீடுகள் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.