தமிழ்நாடு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 10-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2025-01-04 01:41 GMT   |   Update On 2025-01-04 01:41 GMT
  • வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும்.
  • கோவிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.

சென்னை:

மகத்துவம் வாய்ந்த மார்கழியில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏதாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பார்த்தசாரதி கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் காலை 4.30 மணிக்கு திறக்கப்படும். அதற்கான தரிசனக் கட்டண சீட்டு ரூ.500-க்கு ஆன்லைன் மூலம் வருகின்ற 6-ந் தேதி பெற்று கொள்ளலாம்.

1,500 கட்டணச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். மேலும், 500 நபர்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் நிகழ்வுக்கு பிறகு நடக்கும் தரிசன நிகழ்வுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.

முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வைகுண்ட ஏகாதசி அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் கோவிலின் பின்கோபுர வாசல் வழியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை சார்பில் 3 துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என ஒரு முறைக்கு 600 போலீசார் வீதம் 3 முறைகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கோவிலின் சுற்றுப்புறங்களில் 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன.

கோவிலில் 5 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும். கோவில் தெப்பக்குளம் அருகிலும் மற்றும் நரசிம்மர் சன்னதி பின்புறமும் 20 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News