உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே விநாயகர் கோவிலில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு

Published On 2025-01-06 10:05 IST   |   Update On 2025-01-06 10:05:00 IST
  • ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
  • 21 பதார்த்தங்களை படைத்து வழிபாடு செய்வார்கள்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப் புள்ளான் விடுதியில் பிரசித்தி பெற்ற கருப்பையா பிள்ளையார் என்கிற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிள்ளையார் நோன்பு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

கார்த்திகை தீபம் முடிந்த 21 நாட்களுக்கு விரதமிருந்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பொங்கல், எள்ளுருண்டை, அப்பம், சுண்டல் போன்ற 21 பதார்த்தங்களை நாள்தோறும் ஒவ்வொன்றாக படைத்து வழிபாடு செய்வார்கள்.

பின்னர் 22-ம் நாள் சதய நட்சத்திரம் சஷ்டி திதி ஒன்று கூடிய நாளில் 21 நாட்கள் படைத்த பதார்த்தங்களையும் செய்து விநாயகருக்கு படைத்து வழிபாடு செய்வர்.

அப்போது பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து விநாய கருக்கு பிடித்த விநாயகர் அகவல் பாடல்களை பாடியும் விநாயகர் நோன்பு கொண்டாடப்படுவதற்கான கதைகளை கூறியும் வழிபாடு செய்வர்.

இதனைத் தொடர்ந்து மாவிளக்கில் தீயை ஏற்றி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தீயை விழுங்கும் வழிபாடு செய்வர்.

இவ்வாறு தீயை விழுங்கி வழிபடுவதால் நோய்தீரும், தீயசக்திகள் தொடாது என்றும் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்றும் நம்பப் படுகிறது. இந்த வினோத வழிபாட்டை அப்பகுதி மக்கள் பயபக்தியுடன் கண்டுகளித்தனர். 

Tags:    

Similar News