திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்தனர்
- விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த ஆன்மீக சுற்றுலாத் தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் விடுமுறை நாட்களில் அதிகமாக கூட்டம் காணப்படும். தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக அலகு குத்தியும் , காவடி எடுத்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
மேலும் ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆக இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் விரதத்தை தொடங்குவதாக இருந்தாலும், கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வருகையால் திருச்செந்தூர் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது
போக்குவரத்து நெருக்கடியால் உள்ளுர் பொதுமக்கள் ரதவீதிதளில் நடமாட முடியாமல் திணறி வருகின்றனர்.