மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-21)
- வளமையான பல பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே!
- உன் மலர் பாதங்களுக்கு பூக்கள் கொண்டு அர்ச்சிக்கிறோம்.
திருப்பாவை
பாடல்:
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
பால் கறப்பதற்கெனக் கொண்டு வந்த கலசங்கள் நிரம்பி வழியும் வரை, இடைவிடாது பால் சுரந்து கொண்டே இருக்கும் வளமையான பல பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே! உறக்கம் விட்டு எழுவாய். இவ்வுலகில் எல்லோரும் காணும்படியாக ஒளிச்சுடராக காட்சியளித்த கண்ணனே! வலிமை கொண்டவனே! பெரியவனே! கண் விழிப்பாய்! உன்னை எதிர்த்தவர்கள் தங்கள் வலிமையை இழந்து, தோற்று உனது படுக்கையறை வாசல் தேடிவந்து, உன் திருவடிகளில் சரணம் அடைவதைப் போல, நாங்களும் உன் பெருமைகளைப் புகழ்ந்து பாடி வந்து நிற்கின்றோம்.
திருவெம்பாவை
பாடல்:
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில் நகை கொண்டுநின் திருவடி தொழுகோஞ்
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப் பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எமை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
எனது வாழ்வின் முழுமுதல் பொருளாகிய பெருமானே! உன்னைப் போற்றுகின்றேன்! பொழுது விடிந்து விட்டது. உன் மலர் பாதங்களுக்கு பூக்கள் கொண்டு அர்ச்சிக்கிறோம். உன் திருமுகத்தில் மலரும் அருட் புன்னகையை பார்த்து உனது திருவடிகளைத் துதிக்கிறோம். தாமரை மலர்கள் மலர்ந்துள்ள சேறு நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை என்னும் தலத்தில் வாழ்கின்ற சிவபெருமானே! காளை மாட்டின் கொடியைக் கொண்டவனே! என்னை ஆட்கொண்ட பெருமானே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்!